நாங்க பார்த்துக்குறோம்.. நீங்க ப்ரீயா விடுங்க! அதிர வைத்த கங்குலி!

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமாகி இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். எனினும், அடுத்த சர்வதேச தொடர் துவங்கும் முன் அவரை உள்ளூர் டெஸ்ட் போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுமாறு கூறியது இந்திய அணி தேர்வுக் குழு.

பும்ரா கடந்த மூன்று மாதமாக காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதன் பின் இப்போது தான் முழுமையாக குணம் அடைந்து போட்டிகளில் பங்கேற்க தயாராகி இருக்கிறார். இந்திய அணியுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு அதை உறுதி செய்தார்.

அடுத்து நடக்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் பும்ரா இடம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் பும்ரா ஆட இருக்கிறார்.

இந்த நிலையில், தேர்வுக் குழுவினர் அவரை ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் ஆடுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.ஆனால், பும்ரா இந்தப் போட்டியில் ஆட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், காயம் குணமான உடன் டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டாம் என அவர் எண்ணி இருக்கிறார்.

மேலும், அடுத்து டி20 தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில், டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறைந்த ஓவர் போட்டிகளில் இருந்து அவரது கவனத்தை திசை மாற்றும் எனவும் அவர் எண்ணி இருக்கிறார்.இந்திய அணி நிர்வாகமும் அதே கருத்தில் தான் இருந்துள்ளது. கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் பும்ரா இப்போதைக்கு உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டியதில்லை என கருதி உள்ளனர்.

இந்தியா அடுத்து பிப்ரவரி மாதம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடருக்கு தான் பும்ரா அவசியமாக ஆட வேண்டும் என இந்திய அணி திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடாகவே இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா பங்கேற்கிறார். அதனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் தேவைப்பட்டால் அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடலாம் என இந்திய அணி நிர்வாகம் கருதியது.

இந்த விவகாரத்தில் பும்ரா, பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவரது நிலையை புரிந்து கொண்ட கங்குலி உடனடியாக முடிவு எடுத்து அதிர வைத்தார்.

பும்ரா ரஞ்சி தொடரில் ஆட வேண்டாம் என கூறி உள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, அவரை இப்போதைக்கு குறைந்த ஓவர் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறி இருக்கிறார். அதனால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டுள்ளார் பும்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *